நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும்; நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளின் நீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் தாமிரபரணி நதியானது, பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி, சுமார் 125 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.
அதிக மூலிகைக் குணம் கொண்ட தாமிரபரணி நதி, கடந்த சில ஆண்டுகளாக மாசு படிந்து காணப்பட்டு வருகிறது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் தாமிரபரணி நதி பாயும், 12 இடங்களில் நீர் மாதிரிகளை நேரில் சேமித்து, ஆய்வறிக்கைத் தயார் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆனால், அதன் முடிவுகள் வராமல் இருந்து வருகிறது.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த மாதம் தாமிரபரணி நீர் 20% சுத்தம் அடைந்திருந்ததாக சமூக ஆர்வலர்களும், நீர் மேலாண்மை வல்லுநர்களும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தாமிரபரணி நதியில் வரும் நீரின் நிறம் சிவப்பாகவும், ஒருசில இடங்களில் கறுப்பு கலந்தும் இருந்து வருகிறது.
இதனால், தாமிரபரணி நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் மக்களும் நதியில் குளிக்கும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். மேலும் தாமிரபரணி நதியின் நீர் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் வருவதால், குடிநீருக்காகப் பயன்படுத்தும் பாபநாசம் அருகே உள்ள சிவந்திபுரம் ஊராட்சி பகுதி மக்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து பயன்படுத்த, ஊராட்சி நிர்வாகம் மூலம் 'தண்டோரா' அடித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.