திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5வது மற்றும் 6வது அணு உலைகள் கட்டுமானப் பணிகள் சுமார் 49 ஆயிரத்து 621 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. வருகிற 2027ஆம் ஆண்டுக்குள் இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உக்ரைன் - ரஷ்ய போரின் காரணமாக இந்த அணு உலைகளுக்கு வரவேண்டிய உதிரி பாகங்கள் வருவதில் அதிக காலதாமதம் ஏற்பட்டது. இதனால் இதன் திட்ட காலம் மேலும் சில ஆண்டுகள் ஆகும் எனவும், 2030-இல்தான் மின் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவைக் கப்பல் மூலமாக 5வது மற்றும் 6வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டன.
கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவுப் பகுதியில் வரும் பொழுது ஜெனரேட்டர்கள் எடுத்து வந்த இழுவைக் கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவைக் கப்பல், பாறை இடுக்கில் சிக்கியதினால் இழுவைக் கப்பலில் உள்ள உலகத்திலான கயிறு அறுந்து விட்டது. அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவைப் படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.
இதனை மீட்கும் பணிகள் தொடர்ந்து இரு நாட்களாக நடைபெற்றது. இதற்காக சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து இன்று (செப்.10) காலை வல்லுநர் குழுவினர் வந்து ஆராய்ந்து, மூன்று பரிந்துரைகளை செய்தனர். அதன்பின் மும்பை துறைமுகத்தைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.