திருநெல்வேலி அருகே சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோயில் பூசாரி சிதம்பரம் கடந்த ஞாயிறு அன்று (ஏப்.18) அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மேலும், நடராஜ பெருமாள் என்பவர் அரிவாளால் வெட்டிப்பட்டதில் படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்யப்பட்டு உயிரிழந்த சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து 3ஆவது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் தரையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, இறந்த சிதம்பரம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண உதவியாக குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இறந்த பூசாரி சிதம்பரத்தில் உடலை கோயில் வளாகத்தில் புதைக்க வேண்டும். கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.