திருநெல்வேலி:கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு குடும்பத்தினர் 4 பேர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில், ஆறு வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்றும், வழக்கை திரும்ப பெறக் கூறி தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், உயிரிழந்தவர்களின் உறவினர் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து - சுப்புலட்சுமி தம்பதி, தங்களுடைய 2 குழந்தைகளோடு கடந்த 2017ஆம் ஆண்டு கந்துவட்டி கொடுமை குறித்து மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து, அலுவலகம் முன்பு முறையிட்ட இவர்கள் குடும்பத்தோடு நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 2017ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஆறு வருடங்கள் கடந்தும் தற்போது வரை வழக்கு விசாரணை நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று (நவ. 20) ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த இசக்கி முத்துவின் சகோதரர் கோபி மனு அளித்துள்ளார்.