தமிழ்நாட்டில் வரும் 7ஆம் தேதி முதல் அரசு விரைவுப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தென்னக ரயில்வே சார்பில் தமிழ்நாட்டில் மட்டும் 13 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு ரயிலும், சென்னை - தென்காசிக்கு வாரத்துக்கு மூன்று ரயில்கள், சென்னை - தூத்துக்குடி வரை ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 5) காலை முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையொட்டி, திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் பொதுமக்கள் இன்று காலை முதல் பல்வேறு ஊர்களுக்கு முன்பதிவு செய்தனர்.
பெரும்பாலானோர் சென்னை, தாம்பரம் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ரயில் இயக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் ரயில் இயக்கப்படுவதால் நிம்மதி ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.