திருநெல்வேலி: பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளரும், நடிகையுமான குஷ்பூ இன்று நெல்லையில் பாஜக தேர்தல் பேரணியில் பங்கேற்றார். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஊழல் இல்லாத நல்லாட்சியை கொடுத்துவருகிறது. தமிழ்நாட்டிலும் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது.
மோடி மக்களுக்குப் பல நல்ல திட்டங்களைக் கொடுத்துவருகிறார். எனவே, இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
'ராகுல் இளம் தலைவர்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்' - குஷ்பூவின் குசும்பு தமிழ்நாடு முதலமைச்சர் ஊழல்வாதி என்று ராகுல் காந்தி ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுகிறார். ராகுல்காந்தி பரப்புரையால் கண்டிப்பாக எழுச்சி இருக்கும். ஏன் என்றால் அவர் இளம் தலைவர்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அதனால், மக்கள் அவரை காணச் செல்கின்றனர்.
ஒரு தலைவர் மீன் பிடிப்பதைப் பார்த்தோ, 10ஆம் வகுப்பு மாணவர்களுடன் குஸ்தி நடனம் ஆடுவதைப் பார்த்தோ மக்கள் வாக்களிப்பார்களா? ராகுலுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை இல்லாததால், அவரால் மக்களிடம் எளிமையாகச் செல்ல முடியவில்லை.
நேற்று மத்திய அமைச்சர் எளிமையாக புதுச்சேரியில் சாலையோர உணவகத்திற்குச் சென்றார். ஆனால், மோடிக்குப் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் அவரால் மக்களிடம் எளிமையாகச் செல்ல முடியவில்லை.
மக்கள் நீதி மய்யம் பாஜகவின் பி டீம் என திமுக சொல்வது அவர்களுக்கு இருக்கும் பயத்தைதான் காட்டுகிறது. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் எங்களுக்கு கொடுக்கப்படுகிறதோ, அத்தனைத் தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம். திமுக இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை" என்றார்.
இதையும் படிங்க:பள்ளி மாணவியின் சவாலை ஏற்று போட்டிப்போட்டு தண்டால் எடுத்த ராகுல்!