திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பரப்புரைக் குழுவின் தலைவருமான திருநாவுக்கரசர் நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ’தேர்தலுக்கு முன்னர் 5 முறையாவது ராகுல் காந்தி சுற்றுபயணம் அமையவேண்டும் என பிரச்சார் குழு தலைவர் என்ற அடிப்படையில் என் தலைமையில் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக வரும் 23ஆம் தேதி ராகுல் காந்தி கோயம்புத்தூர் வருகிறார். தொடர்ந்து பல இடங்களில் பரப்புரை செய்கிறார்
கோயம்புத்தூரில் விவசாயிகள்,தொழிலாளர்கள்,வர்த்தக துறை சார்ந்த பிரதிநிதிகள் சந்திப்பு என பல நிகழ்வுகள் நடக்கிறது. இது குறித்த விபரம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஆகியோர் முன்னிலையில் 21ஆம் தேதி கோவையில் அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஐந்தாம் கட்ட பயணம் நிறைவில், ராகுல் காந்தி கலந்துகொள்ளும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி நடைபெறும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பெரும்பாலான விவசாயிகளின் வயல்களில் மழைநீர் தேங்கி அறுவடை செய்யமுடியாமல் போனது. நெற்கதிர்கள் அழுகிய நிலையில் காணப்படுகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் நேரடியாக கணக்கீடு செய்து மாநில அரசு மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான உதவியை செய்யவேண்டும். மத்திய மோடி அரசு விவசாயிகளுக்கான எந்த திட்டமும் செய்யவில்லை. ஒரு லட்சம் டிராக்டர்கள் டெல்லியை சுற்றிவருகின்றன.மோடி இதுவரை விவசாயிகளை நேரில் சென்று சந்திக்கவில்லை. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது, விவசாயிகளுக்கு எதிரானது என்றார்.