நெல்லை:நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் பாறைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் , 3 பேரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குவாரி விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு , நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் , விஜய் ஆகியோரை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த விபத்து தற்செயலாக நடந்தது என்று சொல்ல முடியாது எனவும் அதிகாரிகள் மிகுந்த கவனக்குறைவோடு செயல்பட்டுள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்த கே.எஸ்.அழகிரி , குவாரியின் உரிமையாளர் காங்கிரஸை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறதே என கேட்கப்பட்ட கேள்விக்கு தனக்கு அது பற்றி தெரியாது என்றார்.
குவாரி விபத்து - ஆறுதல் கூறிய அழகிரி சட்டத்திற்கு புறம்பாக குவாரி இயங்குகிறது என்றால் அதற்கு அனுமதி அளித்த அலுவலர்களை தூக்கிலிட வேண்டும் என ஆவேசமாக பேசினார். மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்க அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:நெல்லை கல்குவாரி விபத்து - வருவாய்த்துறை செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குனர் நேரில் ஆய்வு