திருநெல்வேலி: மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியில் முத்தமிழ் நகர், மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சிலநாள்களாக குடிநீர் வரத்து தடைபட்டுள்ளது.
இந்தநிலையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநகராட்சி அலுவலர்களிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐந்து நாள்களாக குடிநீர் வழங்கப்படாத நிலையில், ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் மேலப்பாளையம் முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பிரதான சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் முதலில், முத்தமிழ் நகர் பகுதி மக்கள் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அறிந்த மாரியம்மன் கோவில் தெரு மக்களும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால் உணவு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும், தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.
இந்த சாலை மறியல் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை