தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் நிறுவன ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

திருநெல்வேலி: தனியார் நிறுவன ஆக்கிரமிப்பை கண்டித்து நெல்லை அருகே குளத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

By

Published : Jun 15, 2020, 4:44 PM IST

திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள கங்கைகொண்டான் அருகே கீழக்கோட்டை கிராமத்தில் பராக்கிரம பாண்டியர் குளம் அமைந்துள்ளது.

இந்த குளத்தை நம்பி அருகிலுள்ள கொடியங்குளம், புதூர், கைலாசபுரம், புளியம்பட்டி, கோவிந்தாபுரம், வடகரை, புங்கமச்சரி உள்ளிட்ட 9 ஊர்களைச் சேர்ந்த கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக இந்த குளத்தில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக "ஆதா" என்கின்ற தனியார் சோலார் நிறுவனம் சட்டவிரோதமாக அனுமதியின்றி மின்கம்பங்கள் அமைத்துள்ளதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அலுவலர்களிடம் தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதால் மேற்கண்ட ஒன்பது ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கீழக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டித்து குளத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து கீழக்கோட்டையிலிருந்து ஊர் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக குளத்தை நோக்கி சென்றனர்.

அப்போது அங்கு வந்த ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ரகு, காவல் துறையினரின் தடை உத்தரவு அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஒரு தரப்பு பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி திரும்ப அழைத்துச் சென்றனர்.

இருப்பினும் மற்றொரு தரப்பு பொதுமக்கள் சுமார் 150 பேர் எச்சரிக்கையை மீறி குளத்திற்கு சென்று தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மணியாட்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதை ஏற்காத பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கயத்தாறு வட்டாட்சியர் நேரில் வந்து மின்கம்புகளை அகற்ற உறுதியளித்தால் மட்டுமே இங்கிருந்து நகர்வோம் என்று கூறினார்.

பின்னர் கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி பொறியாளர் ராஜேஸ்வரியும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் மூன்று நாள்களில் தனியார் நிறுவனம் அமைத்துள்ள மின் கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details