நெல்லை:பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 பேராசிரியர்கள் கல்லூரி வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஆறு பெண் பேராசிரியர்கள் உள்பட 21 பேர் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக செயல்படும் கல்லூரி:கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகம், கல்லூரிப்பேராசிரியர்களான சகாய அண்டன் சேவியர், பெஸ்கி ஆண்டனி ராயன், ஜான் பீட்டர் பால், மற்றும் இருதயராஜ் ஆகிய பேராசிரியர்களை நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாகத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்திருந்தது.
இந்நிலையில், நேற்று(ஏப்.10) இரவு பொருளாதாரத்துறைப் பேராசிரியர் அமலநாதன் என்பவரை சட்டத்திற்குப் புறம்பாக கல்லூரி நிர்வாகம் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதனைக்கண்டித்து இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேராசிரியர்களும் கல்லூரி நுழைவு வாயில் முன்பு, காலை 10 மணிமுதல் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக ஆறு பெண் பேராசிரியர்கள் உள்பட 21 பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூய சவேரியார் கல்லூரி நிர்வாகம் சட்டத்திற்கு விரோதமாக பேராசிரியர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்து வருவதாகவும் பேராசிரியர்கள் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: நெல்லையில் தாய் நாய் பாச போராட்டம்!