திருநெல்வேலிமாவட்டம், அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செனட் கூட்டம் இன்று (ஆக.04) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தொடர்ந்து மூட்டா அமைப்பின் நிர்வாகியும் செனட் உறுப்பினருமான பேராசிரியர் நாகராஜன் கூட்டத்தில் பேசும்போது, ''மாநில பல்கலைக் கழகங்களுக்கான நிதியை அரசு முறையாக தருவதில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பத்து துறைகள் உள்ளன என்றால், ஒருதுறைக்கு ஏழு ஆசிரியர் என சுமார் 78 ஆசிரியர்கள் பணிபுரிவார்கள்.
இவர்களுக்கு சம்பளம் மட்டும் மாதத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரும். ஆனால், அரசு ஒரு காலாண்டுக்கே 93 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். ஒரு மாதம் இப்பல்கலைக்கழகம் சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் சேர்த்து 5 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
ஒரு மனிதன் உயிரோடு இருக்க எனர்ஜி தேவைப்படுவதைப் போல ஒரு பல்கலைக்கழகம் உயிரோடு இருக்க ஆசிரியர்களுக்கான சம்பள ஒதுக்கீடு தேவை. 2017ஆம் ஆண்டு இருந்து அது தரப்படவில்லை. தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டில் இருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை விவகாரத்து செய்துவிட்டது.
நாம் பராமரிப்பு கேட்டு வருகிறோம். மாநில பல்கலைக்கழகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொல்லப்படுகிறது. நிதி இல்லை என்றால் என்ன ஆகும்... பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை கேட்டால் சம்பளம் போட காசு இல்லை என்கிறார்கள். ‘என்ன கொடுமை சார் இது’ மாநில அரசு பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்கு 7ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. ஆனால், ஒரு மாநில பலகலைக்கழகத்துக்கு நான்கு மாதம் ஒருமுறை 93 லட்சம் ரூபாய் கொடுத்தால் எந்த வகையில் நியாயம்.