தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி டோல்கேட் அருகில் நேற்று (பிப்.27) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
அப்போது, “ நான் தமிழ்நாடு வரும்போதெல்லாம் எனது நெஞ்சம் இந்த மண்ணோடு கலந்து விடுகிறது. தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கின்றபோது என் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து விடுகிறது. என்னை மகிழ வைக்கும் தமிழ்நாட்டை நானும் மகிழ வைக்க வேண்டும் என நினைக்கிறேன்.
தமிழர்களின் மொழி இன உணர்வு என்னை எப்போதும் ஆச்சர்யப்பட வைக்கிறது. அதற்கான காரணத்தை முழுமையாக கண்டறிய தமிழ் மொழியை முழுமையாக படிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்.
ஏழையாக இருக்கும் ஒரு சாதாரண தமிழன் கூட தனது கண்ணியத்தை விட்டு கொடுக்க தயாராக இல்லை. தமிழர்கள் ஒருநாளும் தனது சுயமரியாதையை விட்டு கொடுப்பதில்லை. இதை கண்டு நான் வியக்கின்றேன், மனதாரப் பாராட்டுகிறேன். இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் வழிகாட்டியாக திகழ்கிறது. தமிழ்நாட்டால் தான் இந்தியாவுக்கு வழிகாட்ட முடியும். ஜனநாயகம், சுயமரியாதை, மாநில உரிமைகள், பன்முகத் தன்மை, சகோதரத்துவம், சமத்துவம் உள்ளிட்டவற்றில் தமிழர்கள் தான் இந்தியாவுக்கே வழிகாட்டுவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை தேசத்தின் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே உதவி செய்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு நாட்டின் எஞ்சிய பொருளாதாரத்தை சீரழித்தது.