தமிழ்நாட்டில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் கிடைத்த பொருள்கள், கட்டிட அமைப்பால் ஆச்சரியமடைந்த தொல்லியல் ஆய்வாளர்கள், இது இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைக்கும் எனக்கூறினார்கள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரிக சமூக இருந்தனர் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்ல தமிழர்களுக்கு தமிழ் இலக்கியங்கள் தான் இருந்ததே தவிர, வரலாற்றுப்பூர்வமாக நிருபணம் செய்யும் வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.
கீழக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி செய்ய மக்கள் கோரிக்கை நமக்கு ஒரு சான்று கிடைக்காத இந்த இனத்தின் மேன்மையைக் கூற என தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் காத்துக்கொண்டிருந்த வேலையில்தான் கீழடியில் கிடைத்ததெல்லாம் தமிழர்களுக்கு பொக்கிஷமானது. கீழடி அகழாய்வுக்குப் பின்பு தமிழ்ச் சமூகத்திற்கு தம் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்றும் தொல்லியல் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலாங்கியுள்ளது. இளைஞர்களும் தமிழ், தமிழர் என்ற அடையாளங்களை முன்னிருத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி- தூத்துக்குடி எல்லையில் அமைந்துள்ள கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர், தங்கள் பகுதியில் பழங்கால மட்பாண்ட ஓடுகள், எலும்புகள் கிடைத்துள்ளதால் தங்கள் பகுதியில் அரசு அகழாய்வு செய்ய முன்வரவேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்காக கீழக்கோட்டை கிராமத்திற்கு நாம் சென்ற போது இசக்கிமுத்து என்பவர் நம்மிடைய பேசத் தொடங்கினார்.
கீழக்கோட்டையில் கிடைத்த மண்பாண்ட ஓடுகள் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் என அறிமுகப்படுத்திய அவர், "எங்க ஊர்ல உள்ள 'இந்திரகுளம்' பராக்கிரம பாண்டிய மன்னனால் சுமார் 500 ஆண்டு முன்பு அமைக்கப்பட்டதாக சொல்லுவாங்க. பழமையான இந்தக்குளத்தில இப்போ தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனத்தோடு ஆக்கிரமிப்பு அதிகரிச்சிருச்சு. கொஞ்ச நாள் முன்னாடி சூரியஒளி மின் தகடுகள அமைக்கிறது இந்நிறுவனம் பள்ளம் தோண்டும்போது 4 அடி ஆழத்தில் மண்பாண்ட ஓடு, மனித எலும்புலாம் கிடைச்சுச்சு. இந்தப்பகுதியில அரசு அகழ்வாராய்சி செஞ்சதுன்னா சோலார் நிறுவனத்தோட வேலை தடைபட்டுரும்னு கிடைச்ச தடயங்களை அழிச்சிட்டு வர்றாங்க. நாங்க கிடைச்ச சில பொருக்களை சேகரிச்சு வச்சிருக்கோம். மாவட்ட நிர்வாகமும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் சேர்ந்து இந்தப்பகுதியில அகழாய்வு செஞ்சு வரலாற்றை வெளிக்கொண்டு வரனும்" என்றார்.
மண்பாண்ட ஓடுகள் எடுக்கப்பட்ட இடம் குடியிருப்புக்காடு என்று அழைக்கப்பட்டதாக தெரிவித்த முதியவர் மாடசாமி(90), "அந்தப்பகுதியில் 10 குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும் கொள்ளையர்கள் பயம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததால் அப்பகுதியிலிருந்தவர்கள் அருகிலுள்ள கிராமத்திற்கு பெயர்ந்து வந்தததாகவும் தனது முன்னோர்கள் கூறியுள்ளனர். தற்போது, கண்டுபிடிக்கப்பட்டு பொருள்கள்கூட அவர்களுடையதாக இருக்கலாம் என்றார்.
கீழக்கோட்டையில் கிடைத்துள்ள மட்பாண்டங்கள் மேலும், அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதையல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக தங்களது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்பகுதி மக்களின் கருத்து குறித்து வட்டாட்சியர் பாஸ்கரனிடம் பேசிய போது, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நாங்கள் சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தோம்.
அங்கு மண்ணால் செய்யப்பட்ட ஓடுகள் கிடைத்துள்ளன. இதில், வேறு ஒன்றுமில்லை என்று சாதாரணமாக பதிலளித்தார். இருப்பினும், இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யும்போது நிச்சயம் பல பண்டைய கால தகவல்கள் கிடைக்கபெறும் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் ரூ.10க்கு சோறு போட்டு ஏழைகளுக்கு பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்