திருநெல்வேலி:நெல்லை பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லை மாநகர் முழுவதும் தேவேந்திரர் இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
முன்னதாக, பாளையங்கோட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளராக காசிப்பாண்டியன் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 30ம் தேதி பாளையங்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட மூளிக்குளம் பகுதியில் பாஜக பிரமுகர் ஜெகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திமுக பிரமுகர் பிரபு உட்பட 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்ததை தடுக்க தவறியதாகக் கூறி பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியனை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் (பொறுப்பு) ப்ரவேஷ்குமார் நேற்று (செப்.5) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதேசமயம், காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு சமூக அலுவலர்கள், சமூக வலைதளங்கள் மூலமாக தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாநகர் பகுதியில் தேவேந்திரர் இளைஞர் அணி சார்பில் காசிப்பாண்டியன் பணியிட நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய தமிழக அரசை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நேர்மை மிக்க துணிச்சலான காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன் எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல் ஆய்வாளருக்கு ஆதரவு ஏன்?:கடந்த 30ம் தேதி பாஜக பிரமுகர் ஜெகன் கொலையை தடுக்க தவறியதாகக் கூறி காசிப்பாண்டியன் மீது நடவடிக்கை எழுந்துள்ளது. இந்த கொலைக்கு மூலக்காரணமாக இருந்த திமுக பிரமுகர் பிரபுவுக்கும், ஜெகனுக்கும் இடையே பல ஆண்டுகளாக முன் விரோதம் இருந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு பெண் விவகாரத்தை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கோயில் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்துவது என அடுத்தடுத்து இருவருக்கும் பகை அதிகமானதால் இருவரில் யார் யாரை முதலில் தீர்த்துக் கட்டலாம் என திட்டம் தீட்டும் அளவுக்கு மோதல் உச்சமடைந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பே ஜெகனை கொலை செய்ய பிரபு திட்டம் போட தொடங்கியுள்ளார். இதை நோட்டமிட்ட உளவுத்துறை காவலர்கள், மாநகர காவல் உதவி ஆணையர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஐந்து முறை இரு தரப்புக்கு அலார்ட் மெசேஜ் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த அலார்ட் மெசேஜை கண்டுக் கொள்ளவில்லை. இதன் பின்னணியில் பிரபுவின் அரசியல் பலம் மற்றும் பணப்பலம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே உயர் அதிகாரிகள் நினைத்திருந்தால் ஜெகன் கொலையை எளிதில் தடுத்திருக்க முடியும் ஆனால் அலட்சியப்போக்காக விட்டு விட்டனர்.
அதேசமயம், ஆய்வாளர் காசிப்பாண்டியன் சமீபத்தில் தான் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு மாறி வந்தார். எனவே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் தப்பிப்பதற்காக, காவல் ஆய்வாளர் காசிப் பாண்டியனை பலியாக்க முயற்சிப்பதாக கூறப்படுவதால், காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக தற்போது குரல் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"சனாதானம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசுகிறார்" - டிடிவி தினகரன் விமர்சனம்