தமிழ்நாட்டில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு வசதியாக அவர்களின் வீடுகளில் இருந்தபடியே தபால் வாக்கு அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அந்தவகையில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா நோயாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (மார்ச்.30) தொடங்கியது. இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய 109 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் மாவட்டம் முழுவதும் மூன்றாயிரத்து 403 பேர் தபால் வாக்களிக்க தகுதியானவராகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று (மார்ச்.30) நடமாடும் குழுவினர் ஏற்கனவே கண்டறியப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கேச் சென்று தபால் வாக்கு படிவத்தினை வழங்கினர்.