திருநெல்வேலி:தமிழ்நாட்டின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி அமைந்துள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்ளை உள்ளடக்கிய பொருநை ஆற்றங்கரை நாகரிகம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் முதல் முன்னோடி நாகரிகம் என்று பொருநை நாகரிகம் போற்றப்படுகிறது. கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் பொருநை நாகரீகத்தின் பெருமையை பேசினார். குறிப்பாக பொருநை நாகரிகத்தை குறிப்பிட்டு இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று பெருமையாக பேசினார்.
அது போன்ற பெருமைமிக்க பொருநை நாகரீகத்தை உலகறிய செய்யும் வகையில் திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். மேலும் இந்த பொருநை அருங்காட்சியகத்தில் சிவகளை கொற்கை ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிபடுத்தும் விதமாக ரூபாய் 33.02 கோடி மதிப்பீட்டில் நெல்லையில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு 13.2 ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைக்கிறது. இதற்கான பணிகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது.