திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தில், 1000 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி எதிரில் 12 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி சார்பில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கு நேருஜி கலையரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அரசு சார்பில் கட்டப்படும் முதல் கலையரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலையரங்கில் தனியார் திரையரங்குகளை மிஞ்சும் வகையில் பல்வேறு நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக கலையரங்கு மேடையின் பின்பகுதியில் 205 இன்ச் (25 அடி அகலம் 16 அடி நீளம்) அளவிற்கு பிரம்மாண்ட நிரந்தர எல்.இ.டி. திரை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லை மாநகராட்சியில் தான் அரசு கலையரங்கில் நிரந்தர எல்.இ.டி. திரை பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பொருநை இலக்கியத் திருவிழா : நெல்லை நேருஜி கலையரங்கில் சிறப்பு ஏற்பாடு அதே போல் திரையரங்குகளை மிஞ்சும் வகையில் நவீன இருக்கைகள், கேமரா வசதிகள், கட்டட வடிவமைப்புகள் என அனைத்தும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கலையரங்கத்திற்கு வெளிப் பகுதியில் உணவு அரங்குகள் பசுமை பூங்கா அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் நகரின் மையப் பகுதி என்பதால் கலையரங்கிற்கு வரும் மக்களின் வசதிக்காக பூமிக்கு அடியில் சுமார் 50 கார்கள், 200 பைக்குகள் நிறுத்தும் வகையில் நவீன வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த கலையரங்கின் கட்டட பணிகள் சுமார் 70 சதவீதம் நிறைவுற்று உள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று பொருநை இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. அதை ஒட்டி பல்வேறு அரங்குகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஆட்சியர் விஷ்ணு திட்டமிட்டுள்ளார். அதன்படி புதிதாக கட்டப்பட்டு வரும் நேருஜி கலையரங்கில் முதல் நிகழ்ச்சியாக பொருநை திருவிழாவை நடக்க உள்ளது.
இதையடுத்து கலையரங்கில் அவசரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் எல்.இ.டி. திரை பொருத்துவது உணவு பூங்கா அமைக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே பொருநை இலக்கிய திருவிழாவிற்கு பிறகு அந்த பணிகள் முடிவு பெற்று விரைவில் முழுமையாக கலையரங்கம் திறக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவ. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஈ-டிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக தகவலில், இந்த கலையரங்கில் உணவு பூங்கா, பசுமை பூங்கா, எல்.இ.டி. திரை போன்ற நவீன் வசதிகள் கொண்டு வரப்படும். 12 கோடி ரூபாயில் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரங்கில் 526 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதல்முறையாக நெல்லை மாநகராட்சியில் தான் இது போன்ற பிரம்மாண்ட கலையரங்கம் கட்டப்படுகிறது. ஆட்சியர் கேட்டுக்கொண்டதால் பொருநை திருவிழாவுக்ககாக கலையரங்கை தற்காலிகமாக திறக்கிறோம். தற்போது வாடகைக்கு எல்.இ.டி. திரை எடுத்துள்ள நிலையில், திருவிழாவுக்கு பிறகு அரசு சார்பில் நிரந்தர எல்.இ.டி. திரை பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:துப்பாக்கியுடன் போட்டோவுக்கு போஸ்: 10 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு...