சென்னை: நாடு முழுவதும் நடைபெற்று வரும் 75ஆவது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடர்பாக, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 'இந்திய விடுதலைப் போராட்டம்',
'ஆதிச்சநல்லூர் அரும்பொருட்கள், கீழடி அகழாய்வு மாதிரிகள்' என்ற சிறப்புக் கண்காட்சியைச் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலர் சந்திரமோகன் தொடங்கி வைத்தார்.
3000 ஆண்டுகள் பழமையான நாகரிகங்களைச் சேர்ந்த பொருட்களைக் கொண்ட கண்காட்சி:
இந்தக் கண்காட்சியில், சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணித்தப் போராளிகள் மற்றும் புரட்சியாளர்கள் தொடர்பான ஏராளமானக் கலைப்பொருட்கள், தபால் தலைகள், ஓவியங்கள், புகைப்படங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வரலாற்றுக்கு முந்தைய ‘ஆதிச்சநல்லூர்’ அரும்பொருட்களையும் ‘கீழடி’ அகழாய்வு மாதிரிகளையும் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகத் தொன்மையான, சுமார் 3,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, இரண்டு நாகரிகங்களைச் சேர்ந்த வரலாற்றுக்கு முந்தைய தமிழர்களின் மகத்தான மற்றும் தன்நிகரற்ற செயல்திறனைப் பிரதிபலிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்கலன்கள் செய்தல், உலோக வார்ப்பு, கல், மரம் மற்றும் உலோக வேலைப்பாடுகள், சாகுபடி, நெசவு, போன்றவற்றில் பழத்ததமிழர் கொண்டிருந்த நிபுணத்துவத்தை இக்கண்காட்சியின் வழியே காட்சிப்படுத்தியுள்ளனர். இதனைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு சென்றனர்.
திருநெல்வேலியில் அமையவிருக்கும் ’பொருநை கண்காட்சி’..! நெல்லையில் அமையவிருக்கும் பொருநைக் கண்காட்சி: பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"திருநெல்வேலியில் நிரந்தரக் கண்காட்சி அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
அங்கு பொருநை கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. கீழடியில் நல்லமுறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னைப் புத்தக கண்காட்சியிலும் இதுபோன்ற கண்காட்சி அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது", என்றார்.
இதையும் படிங்க:Demolition: அண்ணா முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்ட பழுதடைந்த பள்ளிக் கட்டடம் இடித்து அகற்றம்!