தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொட்டித்தீர்க்கும் கனமழை; உருக்குலைந்த பொங்கல் வியாபாரம்! - திருநெல்வேலியில் கனமழை விவசாயிகள் வேதனை

திருநெல்வேலி: நெல்லையில் வழக்கத்துக்கு மாறாக ஜனவரி மாதம் கொட்டித்தீர்க்கும் கனமழையால் பொங்கல் வியாபாரம் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வியாபாரிகள் வேதனை
வியாபாரிகள் வேதனை

By

Published : Jan 13, 2021, 4:50 AM IST

பொங்கல் பண்டிகை நாளை தமிழ்நாடு முழுதும் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகள், பழங்கள், மஞ்சள், கிழங்கு, கரும்பு ஆகியவற்றை கொண்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

இதன் காரணமாக காய்கறி, பழங்கள், மஞ்சள், கிழங்கு, கரும்பு விற்பனை அமோகமாக இருக்கும். எனவே, இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அதிக விலை கிடைக்கும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நெல்லை மாநகர பகுதிகளில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மிதமான மழையும் சில நேரங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால் நெல்லை பகுதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள இடங்கள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

தொடர் மழையால் மக்கள் கூட்டம் இல்லாமல் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மஞ்சள் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நெல்லை டவுன் மார்க்கெட்டில் மஞ்சள் விற்பனை செய்து வரும் விவசாயி இளையராணி கூறுகையில், "எங்கள் சொந்த தோட்டத்தில் இருந்து மஞ்சள் எடுத்து வந்து விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு நல்ல விலை கிடைத்தது. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் போதிய கூட்டம் இல்லை. இதனால் உரிய விலையும் கிடைக்கவில்லை" என்றார்.

இதுகுறித்து மஞ்சள் கிழங்கு விவசாயி பட்டுராஜன் கூறுகையில், "தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் கூட்டம் இல்லை. இதனால் மஞ்சள் போதியளவில் விற்பனை ஆகவில்லை. உரிய விலை கிடைக்காமல் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு மலிவான விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் வேதனை

இதற்கிடையில் மார்க்கெட் மாற்றப்பட்டுள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்" என்றார். அதாவது நெல்லை மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்தவகையில் நெல்லை டவுனில் உள்ள பிரபல நயினார் குளம் மார்க்கெட் சமீபத்தில் மூடப்பட்டு தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டது. ‘

பின்னர், அவர்களின் கோரிக்கையை ஏற்று சமீபத்தில் மீண்டும் மார்க்கெட் திறக்கப்பட்டது. இருப்பினும் அங்கு கடைகள் கிடைக்காத சிறிய சிறிய வியாபாரிகள் ஏற்கனவே தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட தற்காலிக மார்க்கெட்டில் கடை விரித்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

எனவே, மார்க்கெட் அங்குமிங்கும் மாற்றப்பட்டதாலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நெல்லையில் மழை பெய்வதால் நாளையும் பொங்கல் வியாபாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். ஜனவரி மாதத்தில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்யும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக டிசம்பர் முடிந்து ஜனவரி தொடங்கிய பிறகும் கூட தொடர்ச்சியாக கன மழை கொட்டித் தீர்ப்பதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் இன்னல்களை சந்தித்தது வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details