நெல்லை:தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பணத்துடன் கூடிய பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் பணம், கரும்பு அரிசி மற்றும் பொங்கலுக்குத் தேவையான பொருள்களான முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதற்கிடையில், கடந்த வாரம் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கிவைத்தார். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள 796 நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கியது. நெல்லையில் உள்ள 4 லட்சத்து 57 ஆயிரத்து 98 குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.