திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷ்ணு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாநகர மேற்கு மண்டல துணை ஆணையாளர் சுரேஷ் குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேட்டி அப்போது தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, "திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 394 வார்டுகள் உள்ளன.
பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மண்டலங்களுக்கு தலா ஒரு பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளன. மூன்று நகராட்சிகளுக்கு 3 பறக்கும் படை குழுவும், 17 பேரூராட்சிகளுக்கு 10 பறக்கும் படை குழுவும் என மொத்தம் 17 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமாக 273 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க:24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணி’ - ககன்தீப் சிங்