திருநெல்வேலி: வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்த கண்ணன், கடந்த ஜூலை 12 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வாகை குளத்தைச் சேர்ந்த நல்லதுரை, சங்கிலி பூதத்தான், அம்மு வெங்கடேஷ், குருச்சின் ஆகிய 4 பேரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், “சிறையில் முத்துமனோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பழிதீர்க்கும் வகையில், சம்பவத்தில் தொடர்புடைய ஜேக்கப்பின் நெருங்கிய உறவினரான கண்ணனை கொலை செய்தோம்” எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய, மேலும் 10 பேர் களக்காடு அருகே சிங்கிகுளம் பெத்தானியா மலைப் பகுதியில் பதுங்கி இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்குன் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் தனிப்படை காவலர்கள் நேற்று (ஜூலை 15) பெத்தானியா மலைப் பகுதிக்கு சென்றனர். ஆனால் அங்கு ஏராளமான பாறைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் அமைந்திருப்பதால் குற்றவாளிகளை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆலோசனையின் பேரில் ஆளில்லா விமானம் மூலம் குற்றவாளிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய மலைப் பகுதி முழுவதும் ஆளில்லா விமானம் பறக்க விடப்பட்டு குற்றவாளிகள் எங்காவது பதுங்கி இருக்கிறார்களா என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:குட்கா மூட்டைகள் பறிமுதல்: மூன்று பேர் கைது