திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கட்சி நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக நேற்று(நவ.22) கன்னியாகுமரி சென்றார். முன்னதாக கேடிசி நகர் மேம்பாலம் அருகே நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இந்த நிலையில் கேடிசி நகரில் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பின்போது அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர், கையில் கட்டுக்கட்டாக பணத்தை கட்சிக்காரரிடம் கொடுத்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முக்கியப்பிரமுகர்களை சாலையில் பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் விஐபி எஸ்கார்ட் வாகனத்தில் செல்லும் அந்த காவல்துறை அலுவலர், காவல் துறை வாகனத்தில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டுகளை வாங்கி தனக்குப் பின்னால் வந்த காரில் இருந்த திமுக நிர்வாகியிடம் 'இரண்டு இருக்கு(2 லட்சம்)' என்று கூறியபடி வேகம் வேகமாக கொடுக்கிறார். இந்தக் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது.