நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக டெல்லியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியும் மாநிலங்களில் அந்தந்த முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடத்தப்படும். ஆனால், இந்த முறை கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் சுதந்திர தின நிகழ்ச்சி எளிமையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் சுதந்திர தின நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள், முதியோர், தியாகிகள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில், நாளை (ஆகஸ்ட் 15) காலை 8.50 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், துணை ஆணையர் சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் சுதந்திர தின நிகழ்ச்சியையொட்டி வ.உ.சி மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 14) காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கலந்துகொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் நின்றபடி ஏற்றுக்கொண்டார். மாநகர காவல் துணை ஆணையர் சரவணனும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.