திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றங்கரையில் சுடலை கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி கோயில் கொடை விழா நடைபெறுவது வழக்கம்.
இந்தக் கொடை விழாவில் கடைகள் அமைப்பதில் இரு சமூகத்தினரிடையே முன்விரோதம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி அருகே சீவலப்பேரி பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அங்கே நின்றுகொண்டிருந்த சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சிதம்பரம் (45), அதே பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் நடராஜபெருமாள் (53) ஆகிய இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த சிதம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நடராஜ பெருமாளை மீட்ட அப்பகுதி மக்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், சிதம்பரத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத கும்பலைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: லிப்ட் கொடுத்ததற்கு பணம் கொடுக்காத நபரை கொலை செய்த இளைஞர்