திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு சாலையோரம் வசித்து வந்த நபர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆகியோரை மீட்ட காவல் உதவி ஆணையர் சேகர், காப்பகத்தில் சேர்த்தார்.
பழுதடைந்த பேருந்து நிலையங்கள், மேம்பாலங்களின் கீழ் வசித்து வந்த இவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை எட்டாக்கனியாகவே இருந்தது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையர் சேகர் இன்று (டிசம்பர் 17) திடீரென சாலையோரம் வசித்துவரும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார்.
அவருடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக நல பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் சேர்ந்து ஆங்காங்கே பொது இடங்களில் வசித்து வந்த நபர்களை சந்தித்து மாற்று உடை வழங்கினர். அதன் பின்னர் அரசு காப்பகம் குறித்து எடுத்துக் கூறி உதவி ஆணையர் அவர்களது மனதை மாற்றினார்.