திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு அருகே சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர், செந்தில் முருகன். இவர் இஎஸ்ஐ அலுவலகத்தில் லிஃப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடித்து வெளியே சென்று விட்டு வீட்டுக்கு நேற்றிரவு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காவல் துறையினர் உடையாபட்டி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
ஹெல்மெட் அணியாமல் வந்த செந்தில் முருகன் காவல் துறையைக் கண்டதும் திடீரென அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை வந்த வழியே திருப்பி உள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உடற்கூராய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
காவல் துறையின் சோதனை காரணமாகவே லிஃப்ட் ஆபரேட்டர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் பழைய மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் காவல் துறைக்கும், உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் கூறி உள்ளனர்.