நெல்லை:வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவர் ஒருவன் பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் வலைதளப் பக்கத்தில் கடந்த மாதம் பெட்ரோல் வெடிகுண்டு வீசுவது போன்ற வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். இதனை சமூக வலைதளத்தில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் மிக தாமதமாக வள்ளியூர் காவல்துறைக்கு தெரிய வந்தது.
இதையடுத்து வள்ளியூர் காவல்துறை அதிரடி விசாரணையில் இறங்கினர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இந்த வீடியோ விவரத்தை விரைவில் விசாரிக்கும் படி உத்தரவிட்டார். அதன் பெயரில் நடந்த விசாரணையில் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், அவரது நண்பர்கள் இசக்கியப்பன்(21), சரவணன்(20) ஆகியோருடன் சேர்ந்து யூடியூப் வலைதளத்தை பார்த்து பெட்ரோல் வெடிகுண்டு தயார் செய்ததாக கூறப்பட்டது.
மேலும் தாங்கள் தயார் செய்த பெட்ரோல் வெடி குண்டுகளை அப்பகுதியில் உள்ள சுவரை நோக்கி வீசிவிட்டு பின்னணியில் ’தேவர் மகன்’ படத்தில் வரும் பாடலை ஒலிக்க விட்டுள்ளனர். அந்த வீடியோ பின்னணியில் ’செத்தாலும் வாழ்ந்தாலும் மறவனாக வாழ வேண்டும்’ மேலும் ’எங்களை என்கவுன்ட்டர் செய்தாலும் நாங்கள் அசர மாட்டோம்’ என்று வீர வசனம் பேசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
இந்த பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சரவணன், இசக்கியப்பன் மற்றும் ஒரு சிறுவன் உள்பட மூன்று பேரை சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது சினிமா படங்களில் வரும் காட்சிகள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது எனவும், அது போன்று தாங்களும் பெட்ரோல் வெடிகுண்டு தயார் செய்ய வேண்டும் என்ற ஆசையால் தயார் செய்துள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.