தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக் ரேஸ் சுள்ளான்களை பிடிக்க காவல் துறையின் புதிய திட்டம்! - மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும் இளைஞர்கள்

மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டும் இளைஞர்கள் செயலுக்கு கடிவாளம் போடும் வகையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

காவல்துறை நோட்டீஸ்
காவல்துறை நோட்டீஸ்

By

Published : Mar 5, 2022, 8:30 PM IST

Updated : Mar 5, 2022, 10:49 PM IST

திருநெல்வேலி: நாளுக்கு நாள் இளைஞர்களிடையே இருசக்கர வாகனம் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் சமீபகாலமாக இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு வகையான புது புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. நாகரீக காலத்தில் இது போன்ற வாகனங்கள் தேவை என்றாலும் கூட இளைஞர்கள் அதை தவறாக பயன்படுத்துவதால் விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் பாதிப்பு

வேகமாக இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் ஓட்டுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்களின் இந்த செயலுக்கு கடிவாளம் போடும் வகையில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

காவல்துறை நோட்டீஸ்

நெல்லை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 2,000 விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு 1,980 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிக வேகத்தில் செல்வதால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. விபத்தை தடுக்க காவல்துறை பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், வள்ளியூர் பகுதியில் இளைஞர்களின் வாழ்வை மீட்பதற்காக மாவட்ட காவல்துறை பொதுமக்களுடன் இணைந்து புது நடவடிக்கையை கையாண்டு வருகிறது.

காவல்துறை நோட்டீஸ்

இளைஞர்கள் யாராவது இருசக்கர வாகனத்தில் அதிக வேகத்தில் சென்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவெண்ணுடன் கூடிய புகைப்படம் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் தொலைபேசி எண்ணை அனுப்பும்படி வள்ளியூர் உட்கோட்ட காவல் துறையினர் பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அதற்காக 94981-01743 என்ற வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை பிடித்து காவல் துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர். இதன் மூலம் வள்ளியூர் பகுதியில் சாலை விபத்துகளில் இளைஞர்கள் உயிர் இழப்பதை தடுக்க முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்து

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "வள்ளியூர் பகுதியில் சாலை விபத்துகளில் சிக்கி இளைஞர்கள் பலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். எனவே, அவர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். புகாருக்கு உள்ளாகும் நபர்களை காவல் துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர் " என்றார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்

Last Updated : Mar 5, 2022, 10:49 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details