நெல்லை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜீசஸ் ஜானின் மகள் பாரதி. இவர், பாளையங்கோட்டை சாந்தி நகர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று (அக்.23) பாரதி பள்ளிக்கு சற்று நேரம் தாமதமாகச் சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் வேலை பார்க்கும் தனியார் பள்ளி நிர்வாகம், ஆசிரியை பாரதியை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாரதி, இது குறித்து தனது தந்தை ஜீசஸ் ஜானுக்கு தகவல் கொடுத்து, தன்னை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து, பள்ளிக்குச் சென்ற ஜீசஸ் ஜான், நடந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. மேலும் பள்ளியில் இருந்த வேலையாட்களைக் கொண்டு தந்தையையும் மகளையும் வலுக்கட்டாயமாக பள்ளி நிர்வாகம் வெளியேற்றியதாகத் தெரிகிறது.
இந்தத் தகவல் கட்சியினரிடையே பரவியதையடுத்து நெல்லை மாநகர பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் சீயோன் தங்கராஜ் தலைமையில் பாமகவினர் பள்ளி முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் பாமகவினர் கலைந்து சென்றனர்.