திருநெல்வேலி:பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் கசாலியின் இல்ல திருமண விழாவில் கலந்துக்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மணமக்களை வாழ்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த ஆறு மாறி இருக்கிறது என்றும் கழிவுநீர் சாக்கடையாக மாறியிருக்கிறது என்றும் தெரியவந்துள்ளதாக கூறினார்.
தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்பது எங்களுக்கு வேதனையான விஷயம். இனியாவது தமிழக அரசு இந்த தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற வேண்டும். சென்னை கூவம் போல இந்த தாமிரபரணி மாறக்கூடாது. சென்னை கூவத்திற்கு 10 ஆயிரம் கோடி , 20 ஆயிரம் கோடி என அறிவித்து என்ன பயன்? அதற்கு முன்பாகவே தடுத்து நிறுத்திருக்க வேண்டும். இப்போது தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவை தடுத்து நிறுத்துங்கள்.
காவிரி உள்ளிட்ட ஆற்றுக்கு தான் மத்திய அரசு அனுமதி தேவை தாமிரபரணி ஆற்றுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. இதை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. திமுக அரசு, விவசாயிகளின் எதிரி அரசு என விவசாயிகள் பேசி வருகிறார்கள். அதை முதலமைச்சர் உறுதிப்படுத்தி விடக்கூடாது. என்எல்சி பிரச்சினையை பாமக சும்மா விடப்போவதில்லை. இது பாட்டாளி மக்கள் பிரச்சினை இல்லை. நெய்வேலி பிரச்சினை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சினை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினை. விவசாய பிரச்சினை. மண் பிரச்சினை. இன்று மண்ணை அழித்துவிட்டால் நாளைக்கு சோறு கிடைக்குமா?. இந்த நிலம் காப்பாற்றப்படும் வரை பாமக கடுமையான போராட்டங்கள் நடத்துவோம். மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவதற்காக நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம் என தமிழக அரசுக்கு தெளிவுப்படுத்துவோம்.
ஜெயங்கொண்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு திமுக அரசு திருப்பி அளித்துள்ளது. கிட்டத்தட்ட 12 அரை ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம் திமுக அரசு திருப்பி அளித்துள்ளது. அதனை வரவேற்கிறோம். அதனை போலவே கையகப்படுத்தபட்ட இந்த நிலத்தை விவசாயிகளுக்கு அரசு ஒப்படைக்க வேண்டும்” என்றுக் கூறினார்.