நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் தாலுகா பகுதியில் அதிகளவில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. பயிர் நன்கு வளர்ந்து கதிர் பிடித்திருந்த நிலையில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு உள்பட்டு பயிர் முற்றிலும் சேதம் அடைந்து விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளானார்கள்.
இதனையடுத்து இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக கிணற்று பாசன வசதி உள்ள நிலத்திற்கு ஏக்கருக்கு 5,300 ரூபாயும் மானாவாரி நிலத்திற்கு ஏக்கருக்கு 3,000 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருவேங்கடம் தாலுகா மலையன்குளம், செவல்குளம் பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1300 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், "இரண்டு பகுதிகளிலும் கிணற்று பாசன வசதி கொண்ட நிலங்களே உள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் உள்ள நிலங்களை வேளாண் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தவறாக மானவாரி நிலமாக கணக்கிட்டதோடு மட்டுமல்லாமல் மானவாரி நிலத்திற்கு வழங்க வேண்டிய தொகை மூன்றாயிரம் ரூபாயை வழங்காமல் 60 விழுக்காடுதான் பாதிப்பு உள்ளது எனக் கூறி வெறும் 1300 ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளனர்.