திருநெல்வேலி: தங்கச்சங்கிலி பறிப்பு விவகாரத்தில், திருடியவரின் முகம் சிசிடிவி காட்சியில் தெளிவாகப் பதிவாகி இருந்தும், 2 ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என வள்ளியூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனுத்தாக்கல் செய்ததை ஏற்க மறுத்த நீதிமன்றம், மீண்டும் கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த கருத்தப் பிள்ளையூரைச் சேர்ந்தவர் ஆசிரியை ஜோஸ்பின் ராணி (45). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி, வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் திருவிழாவிற்காகத் தனது தந்தையார் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவர், வீட்டு வாசலின் முன்பு தனது உறவினருடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், திடீரென முகவரி கேட்பது போல் நடித்து ஆசிரியை ஜோஸ்பின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துத் தப்பி ஓடியுள்ளார். இதன் மதிப்பு சுமார் மூன்றரை லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த வழிப்பறி சம்பவம் அருகில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து, வள்ளியூர் காவல் நிலையத்தில் ஆசிரியை ஜோஸ்வின் ராணி புகார் அளித்ததன் பேரில், சிசிடிவி காட்சிகள் மூலம் வள்ளியூர் காவல்துறை விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வழிப்பறி செய்த திருடனைக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், கடந்த வாரம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வள்ளியூர் காவல் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.