திருநெல்வேலி:திசையன்விளை மணலிவிளையைச் சேர்ந்தவர், சிவா. வழக்கறிஞரான இவர், திசையன்விளை மெயின் ரோட்டில் இருக்கும் கனரா வங்கி அருகில் உள்ள கட்டடத்தில் சொந்தமாக ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.14) இரவு சிவா, கடையை அடைத்து விட்டு ஷட்டருக்கு பூட்டு போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்துள்ளனர்.
இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட சிவா, அங்கிருந்து தப்பிக்க முயன்று சாலையில் வேகமாக ஓடியுள்ளார். அதேநேரம் அவரை தாக்கிய நபர்களில் ஒருவரும் கையில் அரிவாளுடன் அவரைப் பின் தொடர்ந்து வெட்டுவதற்கு துரத்தியுள்ளார். பின்னர், திசையன்விளை கூட்டுறவு வங்கி எதிர்புறம் உள்ள மளிகை கடை ஒன்றில் தஞ்சம் புகுந்த சிவாவை, மர்ம நபர் அரிவாளால் ஓங்கி தலையில் வெட்ட முயன்றுள்ளார்.
அதை சிவா தனது இடது கையால் தடுக்க முயன்றுள்ளார். இதனால் சிவாவின் இடது கை மணிக்கட்டு துண்டாகி தொங்கிய நிலையில் இருந்தது. தொடர்ந்து சிவா உடனே மளிகை கடையின் உட்புறம் தஞ்சம் புகுந்துள்ளார். அப்போது அரிவாளுடன் வந்த நபர் கடையின் உள்ளே சென்றும் சிவாவை வெட்ட முயன்றுள்ளார்.
அப்போது அருகில் உள்ள மற்றொரு மளிகை கடை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி கைகளில் கிடைத்த செங்கல் மற்றும் கம்புகளை கொண்டு மர்ம நபரை அரிவாளை கீழே போடச் சொல்லி வலியுறுத்தி உள்ளனர். அப்போது கையில் அரிவாளுடன் வந்த மர்ம நபர், தனது தாத்தாவின் சொத்தை கள்ளத்தனமாக பத்திரம் போட்டு ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் அபகரித்துக் கொண்டதாக ஆவேசமாக கத்தி உள்ளார்.
மேலும் அரிவாளை கீழே போடச் சொல்லிய பொதுமக்களிடம், கம்பையும் கல்லையும் கீழே போட்டால்தான் அரிவாளை கீழே போடுவேன் என மர்ம நபர் கூறியுள்ளார். உடனடியாக சுற்றி இருந்த பொதுமக்கள் கையில் வைத்திருந்த செங்கல் மற்றும் கம்புகளை கீழே போட்டுள்ளனர். இதனையடுத்து மர்ம நபரும் தன்னுடைய அரிவாளை கீழே போட்டுள்ளார்.