தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இனி உங்களுக்கு ஓட்டே கிடையாது"..வெள்ள பாதிப்புகளை பார்வையிட மறுத்த அமைச்சர் - கொந்தளித்த நெல்லை மக்கள்!

Nellai Flood issue: “கடந்த 25 ஆண்டுகளாக திமுக கோட்டையாக இருந்தது நெல்லை, இனி உங்களுக்கு ஓட்டு கிடையாது” என நெல்லையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மறுத்த அமைச்சரிடம் பொதுமக்கள் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 10:11 AM IST

Nellai Flood issue
Nellai Flood issue

வெள்ள பாதிப்புகளை பார்வையிட மறுத்த அமைச்சரிடம் கொந்தளித்த பொதுமக்கள்

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள மேலப்பாளையம், டவுண் பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொக்கரக்குளம், நெல்லை சந்திப்பு, மணி மூர்த்தீஸ்வரம், சிந்துப் பூந்துறை போன்ற பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ள நீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால், மக்கள் தங்கள் உடமைகளை இழந்து வருகின்றனர்.

தற்போது வரை நெல்லை மாநகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாததாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு, மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மறுத்தது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் மேலப்பாளையம் வழியாக மாவட்டத்தின் பிற பகுதிக்குச் சென்றபோது, மேலப்பாளையத்தின் உட்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், மெயின் ரோட்டில் நின்றபடி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் காரை மறித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் “ஐயா இரண்டு நிமிடம் உள்ளே வந்து பாருங்கள், கொஞ்சம் இறங்கி வாருங்கள்” என கூறுவதும், ஆனால் அமைச்சர் காரில் அமர்ந்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றதும் பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள், "விடியல் அரசு விடியல் அரசு என்று சொல்கிறீர்கள்.. கொஞ்சம் இங்கே வந்து பாருங்கள். 25 வருடமாக உங்களுக்குதான் ஓட்டு போட்டோம். கடந்த 25 ஆண்டுகளாக இது திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இனி உங்களுக்கு ஓட்டு கிடையாது" என ஆதங்கத்தோடு பேசியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு.. ரூ 2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக ஒதுக்க பிரதமரிடம் கோரிக்கை..!

ABOUT THE AUTHOR

...view details