திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திசையன்விளை சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அனைத்து குளங்கள், கண்மாய்கள், ஊருணிகள் நீர்நிலைகள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன. திசையன்விளை அருகே ஆனைகுடி மற்றும் ஆயன்குளம் படுகை காட்டாற்று வெள்ளத்தால் நிரம்பி வழிந்த நிலையில், தற்போது அதிகப்படியான உபரி நீர் வெளியேறி வருகிறது.
வெளியேறும் உபரிநீர் அப்பகுதியில் உள்ள அதிசய கிணற்றில் வடிந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வினாடிக்கு 2ஆயிரம் கன அடி தண்ணீரை உள்வாங்கிய அந்த அதிசய கிணறு, தற்போது அதைவிடவும் அதிகமான கன அடி நீரை உள்வாங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் முன்னதாக ஒரு அணையே உடைந்து வெளியேறும் முழு கொள்ளளவு தண்ணீரையும் உள்வாங்கும் அளவிற்கு ராட்சத தன்மையைக்கொண்டு அனைவரையும் மிரள வைத்தது.
கடந்த முறை இந்தக் கிணற்றின் குறிப்பிட்ட ஒரு ஓரப்பகுதியில் மட்டுமே நீர் உள்ளேச் சென்றது. ஆனால், இந்த முறை கிணற்றின் நான்கு புறம் முழுவதும் அணையில் நீர் பாய்வதைப் போல வெள்ளநீர் உள்வாங்கியது. வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த கிணற்றுக்குப் பல மாதங்கள் முன்பு தண்ணீர் சென்றபோதும் இந்த கிணறு முழுமையாக நிரம்பியதில்லை. ஆனால் தற்போது பெய்த கனமழையில் இந்த அதிசயக்கிணறு முழுமையாக நிரம்பியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.