திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மக்களையும், கேரள மக்களையும் அச்சுறுத்திய காட்டு யானையான அரிக்கொம்பன் பிடிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை அருகேயுள்ள கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது. தொடர்ந்து அதன் கழுத்தில் இருந்த ரேடார் கருவி மூலமாக அரிக்கொம்பன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் மாஞ்சோலை அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் அரிக்கொம்பன் நடமாடியது.
அரிக்கொம்பன் 3 நாட்கள் அப்பகுதியில் முகாமிட்ட நிலையில், மீண்டும் கோதையாறு வனப்பகுதிக்குள் சென்றது. அரிக்கொம்பன் விடப்பட்ட குட்டியாறு அணையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் பகுதி அமைந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மக்கள் வசிக்கும் மலைப் பகுதியான நாலுமுக்கு, ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் அரிக்கொம்பன் யானை நடமாட்டம் இருந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சுமார் 25 வனப்பணியாளர்கள் நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதியில் முகாமிட்டு யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் ரேடார் கருவி மூலமாகக் கண்காணித்த நிலையில், தற்போது அப்பர் கோதையாறு நோக்கி அரிக்கொம்பன் காட்டு யானை சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாலுமுக்கு, ஊத்து பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இதே போல் அரிக்கொம்பன் யானை ஊத்து பகுதியில் இறங்கி விவசாய பயிர்களைச் சேதம் செய்திருந்து. தொடர்ந்து இரண்டாவது முறையாகக் காட்டு யானை கீழே இறங்கியிருப்பதால் மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:திருநெல்வேலி: காவல் நிலையத்தில் நிறுத்திருந்த ஆட்டோவை இயக்க முயன்ற போது தீ.. மர்ம பொருள் வெடிப்பா? என விசாரணை