தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 5) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மாநகராட்சி ஆணையர் கண்ணன், நெல்லை மாநகர காவல்துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டில் 7ஆயிரம் என்ற அளவில் இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 5 ஆயிரமாக குறைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை டவுன் பகுதியில் 2ஆயிரத்து 300 தெருக்கள் உள்ளன. தற்போது, 160 தெருக்கள் கரோனா பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
குறிப்பாக தென்மாவட்டங்களில் முகக் கவசம் அணிவதில் ஒரு சுணக்கம் இருக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், அம்பாசமுத்திரம் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கிராமங்களில் சுய உதவிக் குழுக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.