நாடு முழுவதும் கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஊரடங்கால் வேலையிழந்துள்ளனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில், குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதித்தவர்கள், முதியவர்கள் பலர் ஊரடங்கால் தங்களது பசியைப் போக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டனர். இவர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பசியில்லா தமிழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு உற்ற தோழனாக இருந்து நாள்தோறும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு தினமும் உணவு ஏற்பாடு செய்தல், தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்த சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகிறது. இந்தச் சூழலில் முகாமில் தங்கியிருக்கும் பொதுமக்கள் கடந்த மூன்று மாதங்களாக வெளியில் எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் மனச்சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்த நூறாவது நாளை கொண்டாட்டத்துடன் எடுத்துச்செல்ல மாநகராட்சி மற்றும் பசியில்லா தமிழகம் அமைப்பின் இளைஞர்கள் முடிவு செய்தனர்.