திருநெல்வேலி:2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக, எம்பிக்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஈடிவி பாரத் சார்பில், பிரத்யேக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு குறித்த விவரங்களை பார்க்கலாம். தற்போது, திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஞானதிரவியம் பதவி வகித்து வருகிறார்.
மாவட்டத்தின் சிறப்புகள்:தமிழகத்தின் தென்கோடியில் பல்வேறு பாரம்பரியங்களை உள்ளடக்கிய விவசாயம் நிறைந்த மாவட்டமாக நெல்லை மாவட்டம் உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஐஎன்எஸ் எனப்படும் இந்திய கப்பல் படை அலுவலகம் போன்ற மத்திய அரசின் உயரிய நிறுவனங்கள் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை வேலியாக கொண்டுள்ள நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, தேயிலை எஸ்டேட், அகஸ்தியர் அருவி, பாபநாசம், களக்காடு, தலையணை அருவி, நெல்லையப்பர் திருக்கோயில் ஆகிய சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. மேலும், உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா, பத்தமடை பாய், காரைக்குறிச்சி மண் பானை என பல்வேறு சிறப்புகளையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது.
மக்கள் தொகை: 6 லட்சத்து 69 ஆயிரத்து 490 ஆண் வாக்காளர்கள் மற்றும் 6 லட்சத்து 99 ஆயிரத்து 996 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 13 லட்சத்து 68 ஆயிரத்து 718 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
வேலைவாய்ப்பு: நெல்லை பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் என்பது தொடர்ந்து நீடித்து வருகிறது. பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாததால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வன்முறை: வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் சிலர் மது, கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகின்றனர். மேலும், இளைஞர்கள் சாதி கலவரங்களில் ஈடுபடுவது இப்பகுதியில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கையில் புத்தகங்களை சுமக்க வேண்டிய பள்ளி மாணவர்கள், அரிவாளை சுமந்து கொண்டு கலவரத்தில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில், சாதி வன்மத்தால் நாங்குநேரி அருகே பள்ளி மாணவனை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜாதி மோதலை தடுக்கும் வகையில், இளைஞர்களுக்கு தென் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு ஆணையங்கள் அறிவுறுத்தியுள்ளன.
தாமிரபரணி ஆறு: தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. சுமார் 150 கிமீ தூரம் கொண்ட தாமிரபரணி ஆறு, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.
ஆனால், சமீப காலமாக தாமிரபரணி ஆறு மாசடைந்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால், தாமிரபரணி நதியை சுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராடுகின்றனர். தாமிரபரணி ஆற்றை நம்பி, சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை: 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணை தலைவாய்க்காலில் இருந்து பொட்டல், பானாங்குளம், கங்கணாங்குளம், மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும். ஆனால், அணை நிரம்பாத சமயங்களில், இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பாபநாசம் காரையாறு அணை, எளிதில் நிரம்புவதால், அங்கிருந்து உபரிநீரை மணிமுத்தாறு அணைக்கு கொண்டு வர குழாய் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.