எந்த ஒரு தனி நபருக்கும் ஒரு அடையாளம் இருந்தால் மட்டுமே இந்தச் சமூகத்தால் அவர் திரும்பிப் பார்க்கப்படுவார். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி முத்திரைப் பதித்த 'பரியேறும் பெருமாள்' படத்தில் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்த நெல்லை தங்கராஜ் கிராமிய கலைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் அடையாளமாக மாறினார். திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் வறுமையோடு வாழ்ந்துவருபவர்தான் இந்த நெல்லை தங்கராஜ்.
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (63). கிராமிய கலைஞரான இவர் தனது 17 வயது முதல் தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்தார். ஆணாக இருந்தாலும் தனது தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பெண்ணைப் போன்று தங்கராஜ் வேடமிட்டு பெண்களுக்கான நளினங்களுடன் ஆடி மக்களை மகிழ்வித்துவந்தார். வெறும் தெருக்கூத்து மட்டும் நடத்தினால் குடும்பத்தை கரைசேர்க்க முடியாது என்பதால் இடைப்பட்ட நேரங்களில் வெள்ளரிக்காய் வியாபாரமும் பார்த்துவந்தார்.
இந்தச் சூழலில்தான் இயக்குநர் மாரி செல்வராஜ், தங்கராஜை சந்தித்து தனது படத்தில் நிச்சயம் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் தெருக்கூத்தில் மட்டுமே தனக்கு ஆட தெரியும் சினிமா நடித்து பழக்கமில்லை எனவே என்னை விட்டுவிடுங்கள் என்று தங்கராஜ் மறுத்துள்ளார்.
இருப்பினும் விடாப்பிடியாக, நீங்கள்தான் இந்தக் கதாபாத்திரத்திற்குச் சரியாக இருக்கும் என்று கூறி தங்கராஜை திரைத் துறைக்கு மாரி செல்வராஜ் இழுத்துவந்தார். அவர் எதிர்பார்த்தபடி தங்கராஜின் கதாபாத்திரம் 'பரியேறும் பெருமாள்' படத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் பாவண்ணன் இயக்கத்தில் 'நான் பிசியாக இருக்கிறேன்' என்ற படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' என்ற படத்திலும் நடித்துவருகிறார். கோடிகள் புரளும் சினிமாவில் கால் எடுத்துவைத்தாலும் தற்போதுவரை தங்கராஜின் வறுமை மாறவில்லை.
வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் ஒன்றரை சென்ட் இடத்தில் தங்கராஜ் தனது மனைவி பேச்சு கனி, மகளுடன் வீடு கட்டி வசித்துவந்தார். திடீரென சில நாள்களுக்கு முன்பு தங்கராஜின் வீடு இடிந்து விழுந்ததால் துன்பத்தில் ஆழ்ந்தார். பின்னர் மனம் தளராமல் தனது வீட்டுக்கு எதிரே தற்போது ஓலைக் குடில் அமைத்து அதற்கு மேல் தார்ப்பாய் விரித்து தனது மனைவியுடன் வசித்துவருகிறார்.
கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் தனது மகளை மட்டும் உறவினர் வீட்டில் தங்கவைத்துள்ளார். தற்போது தங்கராஜ் தனது மனைவியுடன் அந்தக் குடிசை வீட்டில் மின் இணைப்பு இல்லாமல் இருளில் வசித்துவருகிறார். 'பரியேறும் பெருமாள்' படத்தில் ரூ.12 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். இதனால் திரை வாழ்க்கை அவருக்குப் புகழைத் தேடித் தந்திருந்தாலும்கூட செல்வத்தைத் தேடி கொடுக்கவில்லை என்றே கூறலாம்.
இந்தச் சூழலில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த நாறும்பூநாதன் சமீபத்தில் தங்கராஜை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்குச் சென்றார். அப்போது கணவன், மனைவி இருவரும் வாழ்வதற்குத் தகுதியில்லாத குடிசையில் வசித்துவருவதைப் பார்த்து கண்கலங்கியுள்ளார்.