திருநெல்வேலி: திசையன்விளை அடுத்த அப்புவிளையைச் சேர்ந்தவர், கன்னியப்பன். இவரது மகன் முத்தையா. 19 வயதான இவர், அழைப்பிதழ் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரோடு உடன் பணிபுரிந்த பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் முத்தையாவை பார்க்க அப்பெண் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் மாலையில் முத்தையா அப்பெண்ணை அவரது வீட்டில் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பணிபுரியும் நிறுவனத்திற்கு வந்த அப்பெண்ணின் அக்கா கணவர், முத்தையாவை காதலை கைவிடும்படி வற்புறுத்தியதுடன், சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அன்றைய தினம் இரவில் முத்தையா கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
இந்த வழக்கு தொடர்பாக முத்தையாவின் நண்பர்களான மதியழகன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக முத்தையா படுகொலை செய்யப்பட்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முத்தையாவின் பெற்றோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, "இந்த வழக்கில் ஆரம்பம் முதலே காவல் துறையினர் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். கட்டாயப்படுத்தி உடலை வாங்க வற்புறுத்துகின்றனர்.
திசையன்விளை பேரூராட்சி தலைவரின் கணவர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் வந்து 3 லட்சம் ரூபாய் தருகிறோம், பெற்றுக் கொண்டு உடலை வாங்கி காரியங்களை செய்யுங்கள் என மிரட்டுகின்றனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பில்லை. உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்" என்றார்.