திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பெரும்பாலும் விவசாயத்தை நம்பிய மாவட்டமாகவே உள்ளது. இங்கு பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற பிரதான அணைகள் உள்பட மொத்தம் ஆறு அணைகள் உள்ளன. ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பெய்யும். எனவே, அந்த நேரங்களில் இந்த அணைகள் விவசாய மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.
குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடியில் இரண்டு கட்டங்களாக விவசாயிகள் ஆண்டுதோறும் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதன் காரணமாக அணைகளில் நீர் இருப்பு அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. 143 அடி உயரமும், 5 ஆயிரத்து 500 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட பாபநாசம் அணையில் 29 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
அதாவது, ஒரு டிஎம்சிக்கு குறைவான தண்ணீரே அணையில் உள்ளது. கடல் போல காட்சி அளிக்கும் பாபநாசம் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தற்போது குளம் போன்று காட்சி அளிக்கிறது. மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறில் 63 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. எனினும், 1.5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே அந்த அணையில் உள்ளது.
விவசாய தேவை மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்ட குடிநீர் தேவையையும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள்தான் பூர்த்தி செய்து வருகிறது. எனவே, அந்த அணையில் இருந்தே தற்போது தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.