திருநெல்வேலி:தென் மாவட்ட மக்களுக்குண்டான தனித்துவமான வழிபாட்டு முறைகளில் ஒன்றுதான் பங்குனி உத்திரம் சாத்தன் வழிபாடு. சாஸ்தா, சாத்தன், சாத்தா என மக்கள் தங்களுக்குத் தெரிந்த பெயர்களைக் கூறினாலும் பொதுவாகவே முன்னோர் வழிபாட்டின் எச்சமாகவே தென் தமிழகத்தில் இது கருதப்படுகிறது. முன்னோர் வழிபாடு என்று கூறினாலும், ஒரே கோயிலில் பல்வேறு சாதி பிரிவினரும் வழிபாடு நடத்துவார்கள்.
வழிபாட்டின் மையத் தெய்வம் ஐயப்பன்:பெரும்பாலும் அனைத்து சாஸ்தா கோயில்களிலும் தர்ம சாஸ்தா என அழைக்கப்படும் ஐயப்பனைக் காணலாம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளாக வணங்கப்பட்டாலும் பெரும்பாலும் குலதெய்வ கோயில்களில் ஐயப்பன் பூர்ணகலா, புஷ்கலா என இரு மனைவிகளோடு காணப்படுகிறார். இதற்கு பின்னணியிலும் பல கதைகள் உள்ளன.
"ஆழி" எனப்படும் பூத வடிவிலான பிரமாண்ட சிலையும் பெரும்பாலான கோயில்களில் காணக்கிடைக்கும். இது பல்வேறு இனக்குழுக்களுக்காக தனித்தனி பீடங்கள் வழிபாட்டு இடமாக இருக்கும். ஒரே சாதியினருக்கு இரு வேறு பீடங்களும், வழிபாட்டுத்தலங்களாக இருப்பதைக் காணமுடியும். ஒரே பீடத்தை வழிபடுபவர்கள் ''சொக்காரர்கள்'' என தென்மாவட்டங்களில் அழைக்கப்படும் பங்காளிகளாக இருப்பார்கள், இவர்களின் மூதாதையர்களைத் தேடிப்பார்த்தால் ஏதோ ஒரு தலைமுறையில் இவர்களின் முன்னோர்கள் அண்ணன், தம்பிகளாக இருந்திருப்பார்கள். இதனால் ஒரே பீடத்தை வழிபடும் குடும்பங்களில் திருமணம் நடைபெறுவது இல்லை.
90 வயதைத்தாண்டிய தென் மாவட்ட பெரியவர்களின் நினைவுகளில் அக்காலத்திய சாத்தன் வழிபாடு இன்றும் நீங்காத நினைவாக இருக்கும். சாத்தன் கோயில்கள் பெரும்பாலும் காட்டுப்பகுதிகளிலும் நதிக்கரைகளிலும் இருக்கும். இங்கிருந்து கிளம்பி பஞ்சம் பிழைக்க நகர்ப்புறங்களுக்கு நகர்ந்தவர்கள் தான் சாத்தனை ஆண்டுதோறும் தேடிச்சென்று வழிபாடு நடத்துகின்றனர். சொரிமுத்து ஐயனார், அருஞ்சுனை காத்த ஐயனார், கற்குவேல் ஐயனார், நெல்லாலே பொங்கலிட்ட நெட்டுவான் கோட்டை சாஸ்தா என ஒவ்வொரு சாஸ்தாவின் கோயிலுக்குப் பின்னாலும் அதற்கேயுரிய வரலாற்றுக் கதைகள் உள்ளன.
ஐயப்பன், ஐயனார், பேச்சி, சொரிமுத்து ஐயன், சுடலை மாடன் , இசக்கி, புலையன், கொம்பு மாடன், பன்றி மாடன், காளி என இந்த குலதெய்வப்பட்டியலில் முருகனும் இடம்பெறுவதைப் பல கோயில்களில் காண முடியும். ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவில் குல தெய்வங்களை தேடிச்சென்று இராத்தங்கி வழிபட்டு திரும்புவார்கள்.
தெய்வங்களுக்கான படையலில் கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், போன்ற சைவப்படையலோடு சில கோயில்களில் வழிபாட்டு முறைகளுக்கேற்ப ஆடு, கோழிகளை பலியிட்டும் படையலிடுவார்கள். வரலாற்று எழுத்தாளரும் பொருநை நாகரிகம் குறித்த ஆராய்ச்சியாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவை ஈடிவி பாரத் நெல்லை செய்தியாளர் மணிகண்டன் அணுகிய போது, ''சங்க இலக்கியங்களிலேயே சாஸ்தா வழிபாடு இருந்ததாக குறிப்பிடுகிறார். 2ஆயிரம் ஆண்டுகளாக வழிபாடு நடக்கும் சாஸ்தா கோயில்களும் தமிழ்நாட்டில் உண்டு" என்கிறார் .
எல்லோருக்கும் குலதெய்வம் சொரிமுத்து ஐயன்:இது குறித்து மேலும் விளக்கிய அவர்,"குலதெய்வ வழிபாடு இரண்டு வகை. ஒன்று அய்யனார் வழிபாடு. மற்றொன்று முன்னோர்கள் வழிபாடு. குலதெய்வம் தெரியாதவர்களுக்கு பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயில் தான் மூலஸ்தனம். அதுபோன்ற சிறப்பு வாய்ந்த கோயில்கள் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ளன. தென் தமிழ்நாட்டு குலதெய்வங்களின் பெயர்கள் அழகுத் தமிழில் இருக்கும்