108 வைணவத் திருத்தலங்களில் பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் திருக்குறுங்குடி ஒன்றாகும். இங்கு மூலவா் நம்பி என்ற திருநாமத்துடன் - நின்ற நம்பி, இருந்த நம்பி. கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி. மலைநம்பி என ஐந்து நிலைகளில் அருள்பாலித்துவருகின்றாா்.
தாயாா் குறுங்குடிநாயகி. இங்குள்ள நம்பியே நம்மாழ்வாராக அவதரித்ததாக வரலாறு. இத்திருத்தலத்தில்தான் ஆழ்வாா்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாா் முக்திப் பெற்றாா். சுவாமி ராமானுஜருக்கு நம்பிபெருமாள் திருமண் காப்பு இட்ட திருவட்டப்பாறை அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த திவ்ய தேசத்தில் பங்குனி பிரம்மோஸ்தவம் திருக்குறுங்குடி பேரருளாளாள இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் சிறப்பாகத் தொடங்கியது.
இதையொட்டி நேற்று மாலையில் ஜீயா் சுவாமிகளின் நியமனம் பெற்றுக் கொண்டு தேங்காய் சாற்றுதல், ம்ருத்ஸங்கரணம், திருமுறைசாற்று போன்றவைகள் நடைபெற்றுன. இன்று காலையில் யாகசாலை விஷ்வக்ஷேன ஆராதனையுடன் ஆரம்பிக்கப்பட்டது.