நெல்லை: கார் மற்றும் பிசான சாகுபடியின்கீழ் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய பிரதான அணைகளை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. மேற்கண்ட அணைகளை நம்பி சுமார் 86,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
விவசாய நிலங்களுக்கு மட்டுமல்லாமல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் மேற்கண்ட அணைகள் இருந்து வருகின்றன. அணைகளைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழையைவிட வடகிழக்குப் பருவமழையின்போது தான், நெல்லை மாவட்டத்திற்கு அதிக மழை கிடைக்கும். எனவே, அந்த சமயங்களில் அணை முழுவதும் நிரம்பும்.
ஆனால், சமீப காலமாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால், அதன் பருவ காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அணைகளில் தண்ணீர் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையும் பெய்ததால் நெல்லை மாவட்ட அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பாபநாசம், மணிமுத்தாறு போன்ற அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வறண்டு காணப்பட்டது.
குறிப்பாக 143 அடி கொள்ளளவு கொண்ட மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை கோடை காலத்தில் 20 அடி கொள்ளளவாக குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம், தென்மேற்குப் பருவமழைத் தொடங்கியதால் பருவமழை கை கொடுக்கும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ஆண்டும் தற்போது வரை தென்மேற்குப் பருவமழை போதிய அளவு மழையை கொடுக்காததால், தற்போது வரை அணையில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது.
இதனால் ஜூன் முதல் வாரத்தில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக, பாபநாசம் உட்பட அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. எனவே, நிலைமையைக் கருத்தில் கொண்டு அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.