திருநெல்வேலி:வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வீச்சிருந்தான் குளத்திற்குச் சென்ற செங்கல் சூளை உரிமையாளர் குமாரை, 5 பேர் கொண்ட மர்மகும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், பண்ணையார் குமார்(வயது40). இவர் சொந்தமாக ஜே.சி.பி, லாரி, செங்கல் சூளை மூலமாக தொழில் செய்து வருகிறார். மேலும் கான்டிராக்டர் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், கருப்பசாமி, முருகன் என்ற 2 ஆண் குழந்தைகளும், மணிஷா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை (ஆகஸ்ட்.9) இவர் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வீச்சிருந்தான் குளத்திற்குச் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை ஓடஓட விரட்டிச் சென்று அரிவாளை கொண்டு தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து தகவலறிந்து சென்ற வீரவநல்லூர் போலீசார் குமார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கார்த்திக் (வயது 24) மற்றும் அவரது நண்பர்கள் கண்ணன், முத்துராஜ், வசந்த், கொம்பையா ஆகிய 5 பேரை வீரவநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில் திருவிழாவில் இவருக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் பழிவாங்கும் நோக்கில் கொலை நடந்ததா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.