திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முருகன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பொதுமுடக்க காலத்தில் முருகன் சிறப்பாக பணிபுரிந்ததாக அலுவலர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்.
இதனிடையே உயிரிழந்த முருகனின் சொந்த ஊரான தச்சநல்லூர் அடுத்த கரையிருப்பு பகுதியில் அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதால் நெல்லை - மதுரை நெடுஞ்சாலை ஊர் விலக்கில் புறக்காவல் நிலையம் அமைக்க முருகன் விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முருகனின் நினைவாக அவரது மனைவி சாந்தி மற்றும் மூன்று மகள்களும் சேர்ந்து அங்கு புறக்காவல் நிலையம் ஒன்றை தங்கள் சொந்த செலவில் அமைத்துள்ளனர். கூடுதலாக அப்பகுதி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த புறக்காவல் நிலையத்திற்குள் நூலக வசதியும் ஏற்படுத்தியுள்ளனர். இதன் திறப்பு விழா இன்று (டிச.12) நடந்தது.