திருநெல்வேலி: சசிகலா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதல் நாளான இன்று (மார்ச் 4) தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை கேடிசி நகர், நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஓபிஎஸ் ஆதரவுடன் அதிமுகவில் நுழைகிறாரா சசிகலா அப்போது அவருக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரண்டு மாவட்டங்களில் அமமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று இரவு சுவாமி தரிசனம் செய்கிறார்.
இந்நிலையில் திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் சசிகலா தங்கியிருந்தபோது அங்கு ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா சசிகலாவை திடீரென வந்து நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக அக்கட்சியில் விவாதம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஓபிஎஸ் கூட்டம் நடத்தினார். இதுபோன்ற சூழ்நிலையில் ஓபிஎஸ் சகோதரர் ராஜா, சசிகலாவை சந்தித்திருப்பதால் ஓபிஎஸ் ஆதரவுடன் சசிகலா அதிமுகவில் நுழைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கட்சியில் தற்போது ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். எனவே, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கும்பகோணத்தில் மேயரான ஆட்டோ ஓட்டுநர்!